சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது ‘கே.ஜி.எப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘டிராகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு 2027 ஜூன் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டிராகன் படக்குழு ஜூனியர் என்டிஆர்-க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், 04.35 நிமிடங்கள் கொண்ட மிரட்டலான வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் கவனத்தை பெற்று வைரலானது.
இந்த நிலையில், நடிகர் ஜூனியர் என்டிஆர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், டிராகன் கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு கிடைத்த வரவேற்பிற்கும் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
"இத்தனை ஆண்டுகளாக, உங்கள் நல்வாழ்த்துகளும் இடைவிடாத ஆதரவும் எனது பயணத்தின் மிகப்பெரிய வரப்பிரசாதங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன. எனது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மிகுந்த அன்புடன் என் பக்கபலமாக நின்றிருக்கும் எனது அன்பு ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.
'டிராகன் கிளிம்ப்ஸ்'-க்குக் கிடைத்த வரவேற்பைக் காணும்போது, அது எங்கள் முகங்களில் ஒரு பெரிய புன்னகையை மலரச் செய்தது மட்டுமல்லாமல், உங்கள் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்ற மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் எங்களுக்கு அளித்துள்ளது. இதற்கான முழுப் பெருமையும் ஒரே ஒரு மனிதரையே சாரும்; அவர்தான் 'டிராகன்' எனும் கனவைக் கண்ட எனது பிரசாந்த் நீல்.
எனது நல்விரும்பிகள், சக ஊழியர்கள், நண்பர்கள், ஊடகத்துறையினர் மற்றும் அனைவருக்கும்—உங்கள் அன்பான வாழ்த்துகளுக்காக- எனது உளமார்ந்த நன்றிகள்."என்று பதிவிட்டுள்ளார்