பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் நடிப்பில் அடுத்து தெலுங்கில் வெளியாக உள்ள திரைப்படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப் படம் வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பார்த்திபன் “என்னுடைய முழுப் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது. அதனால் இயற்கையாகவே தமிழ் சரளமாக வரும். தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியாது. ஆனால், இந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு வந்து உங்களை சந்திப்பேன். அப்போது நான் உங்களிடம் வந்து சரளமாக தெலுங்கு பேசுவேன் என்பதை இந்த மூர்த்தி உங்களுக்கு வாக்களிக்கிறான். மூர்த்தி என்பது என்னுடைய ஒரிஜினல் பெயர்” என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. முற்போக்குவாதியாகவும் புரட்சியும் பேசும் பார்த்திபன், ஆந்திராவில் தன்னை குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பார்த்திபனின் இந்த பேச்சை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதில், “என் பேச்சு யார் மனதையாவது உண்மையிலேயே கீறி புண்படுத்தி இருந்தால் வருத்தம் தேய்ந்த மன்னிப்பையும் தெரிவித்து இந்தப் பிரச்சினையை விட்டுவிட்டு இப்பொழுதை நற்பொழுதாக்கி கொள்ள வேண்டிக் கொள்கிறேன். ஏனோ தெரியவில்லை எந்த லாபமும் இல்லாமல் சில விஷயங்கள் விவாத பொருளாகி பொது நிம்மதிக்கு பங்கம் விளைவித்து விடுகின்றன.
நான் எவ்வளவுதான் தமிழ் மீது பற்றோடு இருந்தாலும் என் பிறப்புச் சான்றிதழை மாற்ற முடியாதுதானே. எப்படி மாற்ற முடியும்? ஏன் மாற்ற வேண்டும்? என் பிறப்பு என் பொறுப்பு அல்ல. விருப்ப மனு போட்டு இப்பெற்றோருக்கு இப்பெயரில் இவ்வீட்டில் இப்படித்தான் இப்படித்தான் பிறக்க வேண்டும் என்று எந்தக் குழந்தையும் கேட்டு பெறுவதில்லை. வளரும் சூழ்நிலையில் தானாக தன் வாழ்க்கையை அது தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.
அப்படி நான் வாழ்க்கைப்பட்டிருப்பது தமிழுக்கு. சோறு சுக யாவும் தமிழே தந்தது. போகும் வரை சொர்க்கம் தமிழே. இதை என்றும் எங்கும் ஏன் உலகெங்கும் பெருமையாய் உறக்கச் சொல்வேன். என் தாய்மொழி தெலுங்குதான் என்பதை அங்கு மட்டுமல்ல, இங்கும் இன்று மட்டுமல்ல நேற்றும் முன்னமும் சொல்லியிருக்கிறேன். உஸ்தாத் பகத் சிங் விழாவில் மிகவும் பதற்றத்துடன் இருந்தேன்.
காரணம், தெலுங்கில் எனக்கு சரியாக பேச வராது. எப்படியாவது நான் திணறுவது தெரியாமல் நாலு வார்த்தையாவது பேசிவிட்டு வந்துவிட வேண்டும் என்பதை கவனத்தில் இருந்ததால் வார்த்தைகளை கவனமாய் களமிறக்க முடியாமல் வியர்க்க வியர்க்க பேசிவிட்டு இறங்கினேன். அப்படத்தின் டப்பிங்கில் தெலுங்கு எனக்கு பேச வாரததால், எனக்கு பதில் வேறொருவர் டப்பிங் செய்திருக்கிறார்.
அது தமிழக்கம் செய்யப்படும் போது நானே பேசுவேன். வருத்தத்தை உயர்த்த வேண்டாம் என நல்லெண்ணத்தில் எழுத ஆரம்பித்துவிட்டேன் எப்படி முடிப்பது எனக்கு தெரியவில்லை. எனவே, இதை ஆரம்பித்தவர்களே அன்போடு முடித்துவிடுங்கள். தமிழ் உயர்ந்ததும் உன்னதமானது மட்டுமல்ல, அன்பும் கருணையும் நிறைந்தது” என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.