திருச்சி,
புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசனின் 136-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்
பாவேந்தர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து பாரதிதாசனின் உருவபடத்திற்கு பூ தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;-
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பிறந்தநாள் பெருவிழா. புரட்சிக்கவிஞர் ஓவியத்துக்குப் பூத் தூவினேன். நிர்வாகிகள் - பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்கள் - பொதுமக்கள்
என்று தீப்பிடிக்கத் திரண்டிருந்த கூட்டத்தில் பாவேந்தரின் பெருமை பேசினேன்.
“தேசியமென்றால் இந்தி, சர்வ தேசியமென்றால் ஆங்கிலம், வழிபாடு என்றால் வடமொழி, பாடலென்றால் தெலுங்கு என்று தமிழ்நாட்டின் ஆதி அடையாளங்கள் அழிந்துகிடந்த காலகட்டத்தில் அத்துணைக்கும் தீர்வாகப் பாவேந்தர் தமிழை முன்வைத்தார்.
‘இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு இன்பந் தரும்படி வாய்த்தநல் அமுது கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு’ என்று தமிழர் மீட்சிக்குத் தமிழை முன்னெடுத்தார்.
வெவ்வேறு சந்துபொந்து வழியே மீண்டும் தமிழுக்கு இடர்வராமல் காப்பது இளைய தலைமுறையின் கடமை. ஆய்வு மாணவர்களே!. தமிழ் இலக்கிய நெடும்பரப்பில்
பாவேந்தர் பாரதிதாசனின் இடம் என்பது யாது என்ற அரும்பொருளில் நீங்கள் ஆய்வு செய்யத் தலைப்பட வேண்டும்; இது என் வேண்டுகோள்” என்று பேசினேன்
இளைய கரங்கள் இடியொலி செய்தன. பதிவாளர் பேரா. காளிதாசன், முனைவர் செல்வக் குமாரன், முனைவர் சந்திரகலா, முனைவர் குபேந்திரன், முனைவர் கோவிந்தராஜன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.