சென்னை,
'பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசூரன்' உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் தொடர்ந்து ‘வடசென்னை 2’ குறித்த தகவலை கேட்டு வந்தனர். சமூக வலைதளங்களிலும் இந்த கேள்வி அடிக்கடி எழுந்து வந்தது.
இந்த நிலையில், வேல்ஸ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், வடசென்னை 2 குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, "வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வடசென்னை 2 படத்தை தயாரிக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது, இனிமேல் வடசென்னை 2 அப்டேட் குறித்து கேட்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார். தனுஷின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.