சினிமா செய்திகள்

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை!

முத்துராமலிங்கத் தேவர் அனைவர்க்கும் நிழல்தந்த அத்துவானக் காட்டு ஆலமரம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

சென்னை,

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாலை அணிவித்து மரியாதை

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-

தேவர் திருமகனின் திருவுருவச் சிலைக்குத் திருமாலை சூட்டினேன். அவர் வணங்கப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு; ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார்க்குத் தனிக்காரணமும் உண்டு. மதுரை மாநகருக்குக் காவலும் ஏவலும் புரிந்துவந்ததொரு வீரஇனக்குழு. ஆட்சி அதிகாரமும் அரசியல் நிகழ்வுகளும் அவர்களை மதுரைக்கு மேற்கே கடத்தின.

கரட்டு நிலங்களின் வறட்டு வாழ்க்கைக்குத் துரத்தப்பட்டது அந்த முரட்டு இனம். அதில் வாழ்விழந்த சிலர் அறத்திற்கு எதிராகத் தங்கள் மறத்தைப் பயன்படுத்தினர் என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஒட்டுமொத்த இனத்தையே குற்றப்பரம்பரை என்றுகூறிக் கைரேகை வாங்கிக் காவல்நிலையத்தில் இரவில் தங்கவைத்தது வெள்ளை அரசு.

வரலாறு பொய்யா? வணங்குகிறோம் அய்யா!

கல்யாண மாப்பிள்ளைகளுக்கு முதலிரவே கிடையாது; முதற்பகல்தான். அந்த ரேகைச்சட்டக் கொடுமையிலிருந்து அந்த இனக்குழுவை மீட்டெடுத்தவர் தேவர் பெருமான். பட்டியலினச் சகோதரர்களையும் தன் உடன்பிறப்பாய் உயிராய் நேசித்தவர்.

அவர் அனைவர்க்கும் நிழல்தந்த அத்துவானக் காட்டு ஆலமரம். வரலாறு பொய்யா? வணங்குகிறோம் அய்யா!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT