சினிமா செய்திகள்

தனது பள்ளித் தமிழாசிரியரை சந்தித்தது குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு

அவரது ஓய்வூதியப் பணத்தில் தேநீர் சாப்பிட்டேன். அது ஜனாதிபதி மாளிகையின் விருந்துக்கு நிகரானது என வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திண்டுக்கல்லிலிருந்து கரூர் செல்லும் வழித்தடத்தில் 'நான் யாருக்கும் ஒரு தொந்தரவும் செய்யமாட்டேன்' என்று ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறது. தாடிக்கொம்பு. சென்றிருந்தேன். அங்குதான் ஓய்வு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார். என் பள்ளித் தமிழாசிரியர் பாசமிகு உத்தமன். யாப்பிலக்கணத்தின் அடிப்படை அலகு எழுத்து அசை சீர் தளை அடி தொடை. அசை பிரிக்க எனக்கு ஆசை ஆசையாய்க் கற்றுக்கொடுத்தவர் ஐயா உத்தமன்.

அந்த மூல இலக்கணம்தான் ஒட்டுமொத்தத் தமிழையும் என்னை உழுதுபார்க்கச் செய்தது. கிராமத்து மக்களின் உரையாடல்களைக் கூட அவர்கள் பேசி முடிக்குமுன் அசைபிரிக்க ஆரம்பித்தேன். ஒருவன் மேடையில் வெண்பாப் பாடும்போதே எங்கே தளைதட்டுகிறது என்றறிந்து தலை குட்டினேன். 1330 குறட்பாக்களையும் அசைபிரிக்கச் செய்ததே அந்த ஆசைதான்.

"நேர் நேர் = தேமா

நிரை நேர் = புளிமா

நிரை நிரை = கருவிளம்

நேர் நிரை = கூவிளம்"

என்று கரும்பலகையில் எழுதும்போது அவர் கருதியிருக்கமாட்டார். இதை நகலெடுக்கிறவர்களுள் ஒருவன்தான் தமிழுக்கு ஞானபீடம் பெறுவான் என்று எழுதிய வைரமுத்துவும் எண்ணியிருக்க மாட்டான் ஞானபீடம் பெற்றுவந்து தமிழாசிரியருக்குத் தங்கத்துண்டு அணிவிப்பான் என்று; அணிவித்தேன்.

அவர் கண்ணிரண்டிலும் கண்ணீர் படலமிட்டது அவர் உடல் மொழியில் ‘இது போதுமப்பா எனக்கு’ என்ற ஆனந்த நடுக்கம் அலைபாய்ந்தது. 'வணங்குவதற்கு மிச்சமுள்ள ஒரே ஒரு மூத்தமகன் நீங்கள்தான் ஐயா' என்று முணுமுணுத்துக்கொண்டேன். அவரது ஓய்வூதியப் பணத்தில் ஒரு தேநீர் சாப்பிட்டேன். அது ஜனாதிபதி மாளிகையின் விருந்துக்கு நிகரானது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.