மும்பை,
மும்பை கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் அவர்கள் 4 பேரையும் நேற்று ஆஜர்படுத்தினர்.
பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப் கார் மீது கடந்த 18-ந் தேதி மும்பை ஜூகு பகுதியில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவரது கார் டிரைவர் மற்றும் அருகில் நின்றிருந்த ஒருவர் என 2 பேர் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். இது தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் அரியானாவின் சோனி பட் மாவட்டத்தை சேர்ந்த குணால்(வயது21), சுமித்(19) மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண்களான ராதா(23), பவிதா(23) ஆகிய 4 பேரின் முந்தைய போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் அவர்கள் 4 பேரையும் நேற்று ஆஜர்படுத்தினர்.
அப்போது போலீசார் தரப்பில், “கைதான நபர்கள் அமிர்தசரஸ் சென்று ஆயுதங்களை வாங்கி வந்துள்ளனர். குறிப்பாக, கைதான 2 பெண்கள் சாலை மார்க்கமாக ரெயிலில் துப்பாக்கிகளை மும்பைக்கு கடத்தி வந்து, தாக்குதல் நடத்தியவர்களிடம் நேரடியாக கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் 'சிக்னல்' செயலியை பயன்படுத்தி பேசியுள்ளனர். இவர்களின் செல்போன்களில் இருந்து துப்பாக்கிகளின் புகைப்படங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே இது குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவர்களது போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2 பெண்கள் உள்பட 4 பேரின் போலீஸ் காவலை நாளை(புதன்கிழமை) வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.