சென்னை,
பிரபல சினிமா தயாரிப்பாளரான கே.ராஜன் (வயது 85). சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தலைவராகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு நீலாவதி என்ற மனைவியும், மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் அவரது மகன் பிரபு என்பவர் இயக்குனராக உள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவில் குடும்பத்துடன் கே.ராஜன் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கே.ராஜன், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தனியாக வசித்து வந்தார். தனசேகரன் என்பவர் கார் டிரைவராக அவருடன் பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை தனசேகரனை அழைத்து காரில் வேளச்சேரி சென்றார். பின்னர் அடையாறு நோக்கி வந்தார். அடையாறு மேம்பாலம் அருகே கார் வரும்போது, தனசேகரனிடம் 'காரை நிறுத்துப்பா... நான் சிறிது தூரம் நடந்து இளைப்பாரி வருகிறேன். நீ முன்னால் சென்று காரை நிறுத்தி வை. நான் வந்து விடுகிறேன்' என்று கே.ராஜன் கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு தனசேகரன் காரை மெதுவாக இயக்கி அங்கிருந்து நகர, சிறிது தூரம் நடந்த கே.ராஜன் திடீரென அடையாறு மேம்பாலத்தில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றில் குதித்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், அடையாறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மயிலாப்பூர் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் அடையாறு ஆற்றில் விழுந்த கே.ராஜனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கே.ராஜன் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத் திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கே.ராஜன் உடல் இறுதி சடங்கு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை விவகாரம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை தெளிவான காரணம் தெரியவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத் தகராறால் கடந்த 5 வருடங்களாக தனியார் ஓட்டலில் அவர் தங்கியுள்ளார். விபரீத முடிவெடுத்ததற்கு கடன் சிக்கலா, தனிமையில் இருப்பதா அல்லது உடல்நலக்குறைபாடு காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறுதியாக கே. ராஜன் தனது கார் ஓட்டுநருடன் சென்றதால், அவரிடம் ஏதேனும் பேசினாரா? மன வருத்தத்தில் இருந்தாரா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாகவே அவர் எந்தவொரு சினிமா நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 15 கோடி ரூபாய் வரை கடன் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சலால் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.