சென்னை,
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சென்னை பாலவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர், சட்டமன்ற தேர்தலையொட்டி சமூக வலைத்தளத்தில் தி.மு.க. வை ஆதரித்தும், விஜய்யின் த.வெ.க. கட்சியை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில் அவர், கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு கடந்த 26 ஆம் தேதி சாப்பிட சென்றார். அப்போது அவருடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. த.வெ.க.வினர்தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டன.
போலீசார் விசாரணையில், 'ஜேம்ஸ் வசந்தன் தனது காரை அப்பகுதியில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் கார் கண்ணாடியை உடைத்திருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் அரசியல் காரணம் இருக்கலாம் என்று கருதி ஜேம்ஸ் வசந்தன் புகார் அளித்திருந்தார். ஆனால் அரசியல் காரணம் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அவர் கேட்டு கொண்டதாக சொல்லப்பட்டது.
இதற்கிடையே, ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்த விவகாரத்தில் 59 வயது பெண்ணுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு திருவான்மியூர் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சாரணைக்கு ஆஜரான பின்னர் அவரது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.