சுமார் 15 காவல் துறையினர் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் எதற்காகச் சோதனை நடத்துகிறார்கள் என்பது குறித்து முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும் நடிகர் பாலாஜி முருகதாஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். வீட்டுக்குள் சண்டை போடுவதும், சர்ச்சை கருத்துக்களை கூறுவதும் என அதிகம் விமர்சிக்கப்பட்டவர் பாலாஜி. சீசன் 4 பிக் பாஸில் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன்பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஓ.டி.டி.யில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் பாலாஜி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். இதிலும் தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி டைட்டில் வின்னர் ஆனார், பாலாஜி முருகதாஸ். இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ‘பயர்’ திரைப்படத்தின் கதாநாயகனாகவும் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் வைத்திருப்பதாக போதைப்பொருள் தடுப்பு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு காவல் துறையினர், நேற்று இரவு (நவம்பர் 8) அவரது வீட்டிற்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சோதனையின் போது சுமார் 15 காவல் துறையினர் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் எதற்காகச் சோதனை நடத்துகிறார்கள் என்பது குறித்து முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும் நடிகர் பாலாஜி முருகதாஸ் வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை டேக் செய்து, “யார் புகார் கொடுத்தார்கள் என்பதை மட்டும் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். யார் புகார் கொடுத்தார்கள், எதற்காக கொடுத்தார்கள் என்று நான் பலமுறை கேட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை. ரத்த பரிசோதனைக்கும் நான் தயார். இது உங்கள் காவல்துறைக்கு அசிங்கம். 15 போலீசார் என் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் பார்த்ததெல்லாம் மூன்று பூனைகளும் ஒரு நாயும்தான். நான் தவறு ஏதும் செய்யவில்லை என்பதால் சர்ச் வாரண்ட் இல்லாமலேயே போலீசாரை வீட்டுக்குள் அழைத்தேன். ஆனால் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எனக்கு உரிய விளக்கம் தேவை. இதை நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன். 30 ஆண்டுகள் கடின உழைப்பு, போராட்டம் கஷ்டம்…. வாரிசு நடிகர்களிடம் இதை செய்வீர்களா. காவல்துறைக்கு இது அசிங்கம்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.