சினிமா செய்திகள்

மீண்டும் அதிரடி காட்ட வரும் பிரபாஸ்... ‘சலார் 2’ குறித்து முக்கிய அறிவிப்பு!

பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட பிரத்யேக விளம்பர வீடியோவில், ‘சலார் 2’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை இயக்குநர் பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ளார்

சென்னை,

நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சலார் 2’ படத்தின் படப்பிடிப்பு 2027-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என இயக்குநர் பிரசாந்த் நீல் அறிவித்துள்ளார்.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ்

‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். தற்போது ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ‘பவுசி’ (Fauzi) என்ற படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் இமான்வி, அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன், காதல் கலந்த கதை

பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் ‘பவுசி’ திரைப்படம், அதிரடி சண்டைக் காட்சிகளுடன் காதல் உணர்வுகளும் கலந்த கதைக்களத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸ் மாறுபட்ட தோற்றத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாளில் வெளியான பிரத்யேக வீடியோ

பிரபாஸின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘பவுசி’ படக்குழு ‘Declassifying File No. 25’ என்ற வாசகத்துடன் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

2027 ஜூனில் தொடங்கும் ‘சலார் 2’

இதற்கிடையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட பிரத்யேக விளம்பர வீடியோவில், ‘சலார் 2’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை இயக்குநர் பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு 2027-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. ஏற்கெனவே ‘சலார்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் அடுத்த பாகம் குறித்த இந்த அறிவிப்பு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதால், ‘சலார் 2’ படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT