சென்னை,
தமிழ் சினிமாவில் இளம் தலைமுறை நடிகர்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் நடிகராகவும் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் அவர், ரசிகர்களிடையே மட்டுமின்றி திரையுலகினரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறார். அந்த வகையில், நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி, சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரதீப் ரங்கநாதனை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அந்தப் பேட்டியில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, "தற்போதைய தமிழ் சினிமாவில் மிகவும் புத்திசாலியான நபர் பிரதீப் ரங்கநாதன். எந்த விஷயத்தையும் திட்டமிட்டு அணுகும் திறன், அதை தெளிவாகத் தொகுத்து சிறப்பாக வழங்கும் திறமை அவரிடம் இருக்கிறது. அது ஒரு படத்தை உருவாக்குவதிலும், ஒரு கதையைச் சொல்லுவதிலும், ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதிலும் வெளிப்படுகிறது.
'கருப்பு' படத்தை பார்த்த பிறகு அவர் எனக்கு அனுப்பிய வாய்ஸ் நோட்டே அவரது சிந்தனை எவ்வளவு தெளிவானது என்பதை உணர வைத்தது. ஒரு படத்தை ஆழமாகப் புரிந்துகொண்டு தனது கருத்துகளை பகிரும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது.
தொடர்ந்து பேசிய ஆர்.ஜே. பாலாஜி, "'டியூட்' படத்தில் பிரதீப் தனது நடிப்பால் திரையை முழுவதுமாக உயிர்ப்புடன் வைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல், 'எல்.கே.ஜி.' படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய வசனத்தின் வரைவை அவரே எழுதியிருந்தார். அவரது படைப்பாற்றல் நடிப்பில் மட்டுமல்ல, எழுத்திலும் வெளிப்படுகிறது" என்றார்.
பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து 100 கோடி ரூபாய்க்கும் அதிக வசூல் செய்த திரைப்படங்களை வழங்கி வருவது சாதாரண சாதனை அல்ல என்றும், இளம் வயதிலேயே ரசிகர்களின் மனதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற கதைகளைத் தேர்வு செய்யும் திறன் அவரிடம் இருப்பதாகவும் ஆர்.ஜே. பாலாஜி குறிப்பிட்டார்.
இறுதியாக, "ஒரு வெற்றிகரமான நட்சத்திரத்திற்கு தேவையான திறமை, திரைக்கதை அறிவு, நகைச்சுவை உணர்வு, ரசிகர்களின் ரசனையை புரிந்துகொள்ளும் திறன் என அனைத்தும் பிரதீப் ரங்கநாதனிடம் இருக்கிறது. அவர் தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக இன்னும் பெரிய உயரத்தை அடைவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று ஆர்.ஜே. பாலாஜி புகழாரம் சூட்டினார்.