சென்னை,
இயக்குநராகவும், நடிகராகவும் தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்து வரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். அவர் தொடங்கியுள்ள 'பிஆர் ஷோ' (PR Show) தயாரிப்பு நிறுவனத்தின் முதல் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2019-ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த அந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து அவர் இயக்கி, நாயகனாக நடித்த 'லவ் டுடே' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், பிரதீப் ரங்கநாதனை முன்னணி இளம் இயக்குநர் மற்றும் நடிகராக உயர்த்தியது.
பின்னர் 'டிராகன்', 'டியூட்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த அவர், தொடர்ந்து ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'எல்ஐகே' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குவதோடு, அதில் நாயகனாகவும் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இயக்குநர் மற்றும் நடிகர் என்ற அடையாளங்களைத் தாண்டி தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் பிரதீப். அவர் தொடங்கியுள்ள 'பிஆர் ஷோ' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை, சிறப்பு அறிமுக வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தை 'டிராகன்' திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இதில் மமீதா பைஜூ, ஸ்வாசிகா, சிவாஜி சொண்டினேனி, அனாமிகா மஹி, லிசி ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இயக்குநர், நடிகர், தற்போது தயாரிப்பாளர் என திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் பிரதீப் ரங்கநாதனின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், முதல் தயாரிப்பாக உருவாகும் இந்தப் படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.