சினிமா செய்திகள்

பிரஜினின் “அந்தரன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படம் ஜூன் 25ல் வெளியாகிறது.

‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில், வரும் 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘அந்தரன்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி, 'விக்கல்ஸ்' விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் பிரஜின் பேசுகையில், “இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறேன். சினிமா வாழ்க்கையில் ஏற்ற இறங்கங்கள், வெற்றி, தோல்வி மாறி, மாறி வருகிறது. ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள். நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். என் மனைவி சான்ட்ராவும் என் வெற்றிக்காக காத்திருக்கிறார்” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில் “நான் படப்பிடிப்பு தளத்தில் நாயகி உடன் பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும்.

‘அந்தரன்’ என்றால் ஒரு ஹண்டர். ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களை கடந்து செல்கிறோம். ஆனால் அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் ‘அந்தரன்’.

இந்த திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினை தழுவியது. இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை. படம் வெற்றி பெற்ற பிறகு இதைப்பற்றி சொல்கிறேன். இந்தப் படத்தின் கதை திரில்லர் தான். ஆனால் அதனை ரொமான்டிக்காக சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது” என்றார்.