சினிமா செய்திகள்

பிரகாஷ்ராஜின் “பாதர்” படத்தின் டீசர் வெளியானது

அப்பா - மகன் இடையேயான உறவை மையமாகக் கொண்டு பிரகாஷ்ராஜ் நடிப்பில் ‘பாதர்’ படம் உருவாகி வருகிறது.

ராஜா மோகன் இயக்கத்தில் கிருஷ்ணா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள ‘பாதர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பாதர்’. ஆர்சி ஸ்டுடியோ தயாரிப்பில், இராஜா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ், ‘டார்லிங்’ கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன், ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையை பேசும் அழகான திரைப்படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். விரைவில் இப்படம் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

அம்மா எனும் உறவை கொண்டாடும் சமூகம், அம்மாவின் பாசத்தை, தியாகத்தை போற்றும் சமூகம் அப்பாவை பற்றிப் பேசுவதே இல்லை. அப்பாவின் பாசம், பெருமை, வலிகள், எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை. ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவையும், அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

நகுல் அப்யங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான தீம் மியூசிக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் இசை வெளியீடு நடைபெறவுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், ‘பாதர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்ற காட்சிகள், வசனங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.