சினிமா செய்திகள்

சண்டை காட்சிகளில் விஜயகாந்துக்கு நிகரானவர் பிரசாந்த் - ஆர்.கே.செல்வமணி

தியாகராஜன் இயக்கும் ‘ரஞ்ஜன்’ படத்தில் பிரசாந்த் வழக்கறிஞராக நடிக்க உள்ளார்.

சென்னை,

தனது 17 வயதில், 1990ம் ஆண்டு ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் அறிமுகமான நடிகர் பிரசாந்த் சினிமாவில் 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். பின்னர் சில காரணங்களால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவ்வாறு பல வருடமாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் பிரசாந்த் நடிப்பில், சமீபத்தில் 'அந்தகன்' என்ற படம் வெளியானது. அந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது நடிகர் பிரசாந்த் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். அந்தகன் படத்தைத் தொடர்ந்து இந்த படத்தையும் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்குகிறார். இந்த படத்தில் தேவயானி மகள் பிரியங்கா மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் தெலுங்கில் ரூ.5 கோடி தயாரிப்பில் வெளியாகி ரூ.60 கோடி வரை வசூல் செய்து வரவேற்பை பெற்ற ‘கோர்ட்’ படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை பிரீத்தி தியாகராஜன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் பிரசாந்த் வழக்கறிஞராக நடிக்கிறார்.

நடிகர் பிரசாந்த் இன்று 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவாக மாற்றியுள்ளனர். இந்த விழாவில், வெற்றிமாறன், கலைப்புலி எஸ். தாணு, கே.எஸ். ரவிகுமார், தேவயானி உள்ளிட்ட பல பிரபலங்கள் கொண்டு புதிய படத்தின் டைட்டிலை வெளிட்டுள்ளனர். அதன்படி, இந்த படத்திற்கு ‘ரஞ்ஜன் த அட்வகேட்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விழாவில் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “பிரசாந்துக்கும் எனக்கும் 35 வருட பழக்கம். 91-ம் ஆண்டு அவரை எப்படி பார்த்தேனோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறார். பிரசாந்த் நடிப்பில் ஏற்கெனவே 3 படங்கள் இயக்கியுள்ளேன். அவர் நடிப்பில் மீண்டும் ஒரு படம் இயக்க நினைக்கிறேன். சண்டை காட்சிகளில் விஜயகாந்த் சாருக்கு நிகரான திறமைகளைக் கொண்டவர் பிரசாந்த். அவர் அஸ்டாவதானி. அவருக்கு டைரக்ஷன், மியூசிக், எடிட்டிங் என அனைத்தும் தெரியும். அவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நல்ல மனிதராக இருக்கிறார்” என்றார்.