இந்தி திரைப்பட நடிகை பிரீத்தி ஜிந்தா, தனது பெயரையும் உருவத்தையும் தவறாக பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப் பேக் (Deep fake) வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் போலி உள்ளடக்கங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து அகற்றக் கோரி மும்பை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரீத்தி ஜிந்தா தாக்கல் செய்த மனுவில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தனது முகம், குரல் மற்றும் உடல் அமைப்பை மாற்றி டீப் பேக் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் சாட்பாட் உரையாடல்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த போலி பதிவுகளை உடனடியாக இணையதளங்களில் இருந்து அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் தன்னைப் பற்றிய இதுபோன்ற போலி உள்ளடக்கங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அவசர வழக்கு மும்பை ஐகோர்ட்டு நீதிபதி மாதவ் ஜாம்தார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பிரீத்தி ஜிந்தா தொடர்பாக இணையத்தில் பரவியுள்ள போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உடனடியாக அகற்றுவதற்கான வழிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 6-ஆம் தேதிக்கு கோர்ட்டும் ஒத்திவைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டால் உருவாகும் டீப் பேக் உள்ளடக்கங்கள் தொடர்பாக திரைப்பட பிரபலங்கள் கோர்ட்டை நாடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரீத்தி ஜிந்தாவின் இந்த வழக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.