சினிமா செய்திகள்

பிருத்விராஜின் “ஒடியன்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரித்விராஜ், மஞ்சு வாரியர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஒடியன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

பூதகாலம், பிரம்மயுகம், டீயஸ் ஐரே படங்களை இயக்கி ரசிகர்களிடம் ஹாரர் இயக்குநர் எனப் பெயரெடுத்த ராகுல் சதாசிவன் நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் மஞ்சு வாரியரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்கவுள்ளார். கரண் ஜோஹரின் ‘தர்மா புரொடக்சன்ஸ்’ மற்றும் பிருத்விராஜின் ‘பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘ஒடியன்: தி ஏஜ் ஆப் இல்யூஷன்’ என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

19-ஆம் நூற்றாண்டின் கேரளப் பின்னணியில், அங்குள்ள உள்ளூர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகிறது. ‘உண்மைக்கும் மாயைக்கும் இடையிலான ஒரு போர்’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இதன் மிரட்டலான போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

முன்னதாக 2018-ஆம் ஆண்டில் மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் ‘ஒடியன்’ என்ற பெயரில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது ராகுல் சதாசிவன் இயக்கும் இந்தத் திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கற்பனை மற்றும் ஹாரர் கதைகளத்தைக் கொண்டிருக்கப் போகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.