98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கும் நபர்களின் பட்டியலில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயர் இடம் பெற்றுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக உலகமெங்கும் இருந்து சினிமா துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்கவுள்ளனர். ஆஸ்கர் விருது சினிமாத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இப்படியான நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வில் அர்னெட், ராபர்ட் டௌனி, அனி ஹேத்வே, பால் மெஸ்கல், வெய்னத் பால்ட்ரோ ஆகியோருடன் சேர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா பெயரும் இடம் பெற்றிருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரியங்கா சோப்ரா ஏற்கனவே தொகுத்து வழங்கியுள்ளார். 2017ம் ஆண்டில் பார்வையாளராக கலந்து கொண்டார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்படியான நிலையில் கோல்டன் குளோப்ஸ் 2026 விருது வழங்கும் விழாவிலும் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளராக களம் காண்கிறார். ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை நடிகை தீபிகா படுகோனே தொகுத்து வழங்கிய கவுரவத்தைப் பெற்றிருந்தார். பிரியங்கா சோப்ரா இந்தாண்டு இடம்பெற்றிருப்பது நிச்சயம் சிறப்பு சேர்க்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் பிரியங்கா சோப்ரா எஸ்.எஸ். ராஜமௌலியின் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். மகேஷ் பாபு, பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோரோடு மந்தாகினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இது பிரியங்காவின் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.