தெலுங்கில் அறிமுகமாகி தமிழ் மொழியில் இன்று கொடி கட்டி பறப்பவர் நடிகை பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அவர் தமிழுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனை தொடர்ந்து 'எதற்கும் துணிந்தவன்', 'கேப்டன் மில்லர்', 'பிரதர்' உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடத்திலும் தற்போது பிசியா நடித்து வருகிறார்.
ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மேட் இன் கொரியா’. இதில், நாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் முழுவதும் பீல் குட் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 12 மொழிகளில் கடந்த மார்ச் 12ம் தேதி வெளியானது.
தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண், கொரிய கலாசாரத்தின் மீதுள்ள ஈர்ப்பால் தென் கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு அவர் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி 'பீல் குட்' பாணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெற்றியைப் படக்குழுவுடன் சேர்ந்து நெட்பிளிக்ஸ் கொண்டாடியுள்ளது.
இப்படம் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய டாப் 10 படங்களில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த வெற்றி விழாவில் நடிகை பிரியங்கா மோகன், இயக்குநர் ரா. கார்த்திக் உடன் படக்குழுவினர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிர்வாகத்தினர் பங்கேற்றனர். படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.