சினிமா செய்திகள்

"எஸ்டிஆர் 51" படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி "எஸ்டிஆர் 51" குறித்து பேசியுள்ளார்.

சென்னை,

நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகவுள்ள ‘எஸ்டிஆர் 51’ திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்திற்கு ‘காட் ஆப் லவ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியபோதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தற்போது சிலம்பரசன் தனது ‘அரசன்’ திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

‘அரசன்’ படத்தில் பிஸியான சிலம்பரசன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ‘எஸ்டிஆர் 51’ திரைப்படத்தின் பணிகள் சற்று தாமதமானாலும், படம் கைவிடப்படவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எல்லாமே தயாராக உள்ளது"

சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது: “‘எஸ்டிஆர் 51’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தற்போது உறுதியான தேதியை அறிவிக்க முடியாது. ஆனால் இந்தப் படத்திற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம். சிலம்பரசன் சாரும் தயாராக இருக்கிறார். அஸ்வத் மாரிமுத்துவின் திரைக்கதையும் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. படப்பிடிப்பு அட்டவணையில் சில மாற்றங்கள் மட்டுமே உள்ளன. இந்தப் படம் நிச்சயமாக உருவாகும்,” என்றார்.

மேலும், “2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று நம்புகிறேன். அஸ்வத் மாரிமுத்து மற்றும் சிலம்பரசன் தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்தவுடன் இந்தப் படம் தொடங்கும். எல்லாமே தயாராக இருக்கிறது. அவர்கள் இருவரும் சம்மதம் தெரிவித்தால் அடுத்த மாதமே கூட படப்பிடிப்பை தொடங்க முடியும்,” என்றும் தெரிவித்துள்ளார்.