Profits exceeding 400 times the budget... The movie ‘Obsession’ took the box office by storm
சென்னை,
வெறும் ரூ.10 கோடிக்கும் குறைவான தயாரிப்பு செலவில் உருவான ‘ஆப்செஷன்’ அமானுஷ்ய திகில் திரைப்படம், உலக அளவில் ரூ.2,830 கோடிக்கும் மேல் வசூலித்து திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தயாரிப்பு செலவை விட சுமார் 400 மடங்கு அதிக வருவாயை ஈட்டியுள்ள இந்த படம், குறைந்த செலவில் உருவாகி அதிக வசூல் குவித்த திரைப்படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
‘ஆப்செஷன்’ திரைப்படத்தின் கதை, இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரியும் பேர் என்ற இளைஞரை மையமாகக் கொண்டு நகர்கிறது. தனது சக ஊழியரான நிக்கியை காதலிக்கும் அவர், தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார். இதற்கிடையில், விருப்பங்களை நிறைவேற்றும் அதிசய சக்தி கொண்ட ஒரு பொம்மை அவருக்கு கிடைக்கிறது. நிக்கி தன்னை காதலிக்க வேண்டும் என்ற ஆசையை அவர் தெரிவிக்கிறார். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறிய பின்னர், எதிர்பாராத திகிலூட்டும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேறத் தொடங்குகின்றன.
இந்த திரைப்படம் இந்தியாவில் வெறும் 362 திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்ட போதிலும், ரூ80 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவான செலவில் உருவான இந்த படம், உலகம் முழுவதும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திகில் திரைப்படங்களின் வசூல் சாதனைகளில் ‘ஆப்செஷன்’ குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று இந்தப் படம் தொடர்ந்து சக்கைப் போடு போட்டு வருகிறது.