கன்னட திரையுலகில் துணை நடிகராகவும், சின்னத்திரை தொடர்களில் பிரபலமானவராகவும் விளங்கியவர் ஹரீஷ் (வயது 40). இவர் நேற்று நள்ளிரவு தனது பணிகளை முடித்துவிட்டு, குஷால்நகரில் இருந்து தனது சொந்த ஊரான ஹோஸ்கோட்டிற்கு காரில் புறப்பட்டார். அப்போது கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை 275-ல் அனேகாடு வனப்பகுதி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டேங்கர் லாரி மீது ஹரீஷின் கார் பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த கோர விபத்தில் கார் முற்றிலுமாக நசுங்கி உருக்குலைந்தது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய நடிகர் ஹரீஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குடகு நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஹரீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீ சார் நடத்திய விசாரணையில் அதிவேகமே இந்த விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த நடிகர் ஹரீஷின் மறைவு, கன்னடத் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.