சென்னை,
ரஜினி – நெல்சன் கூட்டணி உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘அலா போலேலோ’ பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘அலா போலேலோ’ என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில், அனிருத் இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் நடிகை பூர்ணா சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார்.