மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். மாதவன் இந்தியில் வெளியான சைத்தான் படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுடன் நடித்துள்ளார். மாதவன் கங்கனா ரணாவத்துடன் இணைந்து இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்டரி படத்தை மாதவன் இயக்கியிருந்தார். மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடித்து வருகிறார். மாதவன் நடித்துள்ள ‘லெஜஸி’ வெப்சீரிஸ் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானது.
முன்னணி நடிகர், நடிகைகளின் பெயரில் சமூக வலைதளங்களில் போலியான கணக்குத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இப்போது நடிகர் மாதவன் பெயரில் மோசடி கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரோஹன்மைரா 2’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு தனது பெயரையும், தனது குழுவின் பெயரையும் பயன்படுத்தி பொதுமக்களிடம் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். “இந்த நபருக்கும் எனக்கும் அல்லது எனது குழுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் ஒரு மோசடி கணக்கு. எனது சார்பாகப் பேச வேறு எந்தக் கணக்குக்கும் அனுமதி இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அந்த நபர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.