ராகவா லாரன்ஸ் தன் 30-வது திரைப்படத்தைத் தயாரித்து இயக்கவுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.
நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் கவனம் பெற்று பின் நடிகராகவும் நல்ல இடத்தைப் பிடித்தவர் ராகவா லாரன்ஸ். பல படங்களில் துணை நடிகராக நடித்து, நாயகனாகியும் தனக்கான வரவேற்பைப் பெற்றார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ராகவா லாரன்ஸின் பெரிய வெற்றிப்படமாக முனி அமைய, தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் லாரன்ஸின் மார்க்கெட்டை உயர்த்தியது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார். தற்போது, காஞ்சனா-4 படத்தை இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடித்துவருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் ராகவா லாரன்ஸின் 25-வது திரைப்படமான ஹண்டர் படத்திலும் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் தன் 30-வது திரைப்படத்தைத் தயாரித்து இயக்கவுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.