சினிமா செய்திகள்

நான் வேலைக்குச் செல்வதை ரகுவரன் விரும்பவில்லை : நடிகை ரோகிணி

தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய ரோகிணி, ரகுவரன் தனது சினிமா பயணத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோகிணி. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கதாநாயகியாக அறிமுகமாகும் முன்பே குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். நடிகை மட்டுமல்லாமல் பின்னணி குரல் கலைஞர், எழுத்தாளர் மற்றும் இயக்குநராகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

நடிகர் ரகுவரனை காதலித்து 1996-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரோகிணி, பின்னர் 2004-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இந்த தம்பதியருக்கு ரிஷி என்ற மகன் உள்ளார். ரகுவரனிடம் இருந்து பிரிந்த பிறகும், பல்வேறு நேர்காணல்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகளில் அவரைப் பற்றிய நினைவுகளை ரோகிணி பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எனது சினிமா வாழ்க்கைக்கு ஆதரவளிக்கவில்லை

அண்மையில் அளித்த பேட்டியில் தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய ரோகிணி, ரகுவரன் தனது சினிமா பயணத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ரகுவரன் எனது சினிமா வாழ்க்கைக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை. நான் வேலைக்குச் செல்வதை அவர் விரும்பவில்லை. நான் ஒரு குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதனால்தான் திருமணத்திற்குப் பிறகு 7 ஆண்டுகள் நான் சினிமாவில் இருந்து விலகி இருந்தேன்” என்றார்.

மீண்டும் சினிமாவுக்கு திரும்ப பல போராட்டங்கள்

மேலும் பேசிய அவர், “ரகுவரன் வளர்ந்த குடும்பச் சூழல் அப்படிப்பட்டது. அவருடைய குடும்பத்தில் பெண்கள் வேலைக்குச் செல்லும் வழக்கம் இல்லை. தனது மனைவி எப்போதும் தன்னுடைய பாதுகாப்பிற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது.

அந்த மனநிலையிலிருந்து வெளியே வர எனக்கு நீண்ட காலம் பிடித்தது. பல்வேறு போராட்டங்களையும் சவால்களையும் கடந்து தான் மீண்டும் சினிமாவுக்கு திரும்ப முடிந்தது. அதன் பிறகு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றேன்” என்று தெரிவித்துள்ளார். ரோகிணியின் இந்த வெளிப்படையான கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.