ரகுல் பிரீத் சிங்  
சினிமா செய்திகள்

ரகுல் பிரீத் சிங் தொடர்புடைய இடங்களில் திடீர் வருமான வரித்துறை சோதனை

ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள "ராமாயணா" இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

மும்பை,

நடிகை ரகுல் பிரீத் சிங்கின் தொடர்புடைய மும்பையின் 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங். பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் இந்த ஆண்டு "மேரி ஹஸ்பண்ட் கி பிவி” படத்தின் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் அஜய் தேவ்கனுடன் "தேதே பியார் தே 2" ல் நடித்திருந்தார். ஆர் மாதவன் மற்றும் தபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படம் நல்ல வசூலை பெற்றது.

இவர் தமிழில், தடையறத் தாக்க படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன், ஸ்பைடர், தேவ், என்ஜிகே அயலான் மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்தநிலையில், ரகுல் பிரீத் சிங், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பக்னானி மற்றும் பேனோரமா ஸ்டுடியோஸ் ஆகியோருடன் தொடர்புடைய மும்பையின் 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திரைப்பட தயாரிப்பு மற்றும் நிதி மேலாண்மையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

திரைப்படங்களுக்கான முதலீடுகள், வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான நிதியுதவிகள் சார்ந்து இந்த சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படத் தயாரிப்பு பணிகள் என வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளர் வாசு பக்னானி, பூஜா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது மகன் ஜாக்கி பக்னானியைத்தான் ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிறுவனம் சுமார் 30க்கும் மேற்பட்ட இந்திப் படங்களைத் தயாரித்துள்ளது.

அதில் சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படங்கள். ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள "ராமாயணா" இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் ரகுல், சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

SCROLL FOR NEXT