சென்னை,
ஆதி, ஹன்சிகா மோத்வானி நடித்த 'பார்ட்னர்' திரைப்படத்தைத் தொடர்ந்து, ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'நோவா - பேஸ் ஒன் - தி அரைவல்'. இந்தப் படத்தின் மூலம் மிலோ இயக்குனராக அறிமுகமாகிறார். திகில் மற்றும் திரில்லர் அம்சங்களுடன், சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் பிரபலமான ரைசா வில்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் துருவா, அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஸ்வாதிகா, கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
படப்பிடிப்பு குறித்து படக்குழுவினர் கூறியதாவது:- "கேரளாவின் மறையூர் பகுதியில் உள்ள சந்தன மரக் காடுகளில் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அனுமதி பெறுவதற்கே மிகவும் சிரமமான அந்த வனப்பகுதிக்குள் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். ரத்தம் உறிஞ்சும் அட்டைகள், அடர்ந்த பனி, தொடர்ந்து பெய்த மழை, வனவிலங்குகளின் அச்சுறுத்தும் சத்தம், சேறும் சகதியுமான பாதைகள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தோம்," என்று தெரிவித்தனர். சயின்ஸ் பிக்ஷன் மற்றும் திகில் அம்சங்கள் நிறைந்த 'நோவா - பேஸ் ஒன் - தி அரைவல்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.