‘லவ் இங்க்’ படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ளதாக இயக்குநர் மேகராஜ் தாஸ் தெரிவித்துள்ளார்.
ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் முதன்மை வேடங்களில் நடிக்கும் திரைப்படம், ‘லவ் இங்க்’. இதில் ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்டிமன்றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேகராஜ் தாஸ் இயக்கும் இப்படத்தை எம்ஆர் பிக்சர்ஸ் ஏ.மகேந்திரன் ஆதிகேசவன் வழங்குகிறார். தரண் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இது தற்கால உறவுகளைச் சுற்றி வரும் ரோம்-காம் திரைப்படம். இப்போதிருக்கும் தலைமுறை மத்தியில் ‘லவ் இங்க்’ என்ற சொல் மிகவும் பிரபலம். தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களையோ அல்லது காதல் சின்னத்தையோ ஜோடிகள் டாட்டூ போட்டுக் கொள்வதுதான் ‘லவ் இங்க்’. இதனால், ஜோடிகளுக்கு இடையில் காதல் கூடுகிறது என்று நம்பப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தஞ்சை பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராஜ் அய்யப்பா வலிமை, 100 படங்களில் நடித்துள்ளார். ‘உப்பு புளி காரம்’ ஓடிடி தொடரில் இவரது கதாபாத்திரம் பிரபலமானது. டெல்னா டேவிஸ் டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் மேகராஜ் தாஸ் “இன்றைய தலைமுறையின் சமகால உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், நவீன காதலை நகைச்சுவையுடன் சொல்கிறது. இளைஞர்களை மட்டுமல்லாமல், குடும்பத்துடன் ரசித்து, கொண்டாடக்கூடிய படமாகவும் இருக்கும். பெரும்பாலான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள சுனில் ரெட்டி இதில் வில்லனாக நடித்துள்ளார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டிசம்பரில் வெளியாகவுள்ளது” என்றார்.