சினிமா செய்திகள்

'ராமாயணா' படத்தை பாராட்டிய ராஜமவுலி - ரன்பீர் கபூர், யாஷ் நடிப்புக்கு புகழாரம்

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ராமாயணா படத்தை பார்த்த இயக்குநர் ராஜமவுலி, படத்தின் காட்சிகளையும் நடிகர்களின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

சென்னை,

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த இயக்குநர் ராஜமவுலி, படத்தின் காட்சிகளையும் நடிகர்களின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பிரமாண்ட காட்சிகள்... ராஜமவுலி பாராட்டு

'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்.' உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்களை இயக்கிய ராஜமவுலி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'ராமாயணா' படம் குறித்த பாராட்டுகளைப் பகிர்ந்துள்ளார்.

அதில், "ராமாயணா படத்தின் பிரமாண்டமும், திரையரங்குகளில் பார்க்கும்போது அதன் காட்சிகளும் அற்புதமாக உள்ளன. ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர், குறிப்பாக வனவாசம் தொடங்கிய பிறகு அமைதியும் கம்பீரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ராவணனாக மிரட்டும் யாஷ்

ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யாஷ் அச்சுறுத்தும் வகையிலான தோற்றத்தையும், வலுவான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி அழகாகவும், கம்பீரமாகவும் நடித்துள்ளார். படத்தின் முன் கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்தேன். இவ்வளவு பிரமாண்டமான படைப்பை அழகாக திரைக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்பே பாராட்டிய ராஜமவுலி

படத்தின் டிரெய்லர் வெளியானபோதும் ராஜமவுலி படக்குழுவினரைப் பாராட்டியிருந்தார். ஒவ்வொரு நடிகரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளதாகவும், இத்தகைய இதிகாசக் கதையைப் பிரமாண்டமாக திரைக்குக் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், படம் வெளியான பிறகு மீண்டும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்திருப்பது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT