சென்னை,
'லாம் சலாம்' படத்திற்கு பிறகு 'டெக்ஸ்லா' என்ற படத்தை இயக்க இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இந்தப் படத்தில் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் லதா ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாலா, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் சாண்டி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பூஜை முடிந்த பிறகு லதா ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இந்த புதிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதுவிதமான கதைகள் வருவது ஒரு ஆரோக்கியமான விஷயம். திரைப்படம் வெற்றிபெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
ரஜினி கமல் இணைந்து நடிப்பது மிகவும் சிறப்பான தருணம், அடுத்த தலைமுறைக்கு இது உத்வேகத்தை அளிக்கும். இந்த நிகழ்வு ஒரு மைல்கல்லாக இருக்கும், இருவரை நினைத்து பெருமைப்படுகிறேன்.
இசையமைப்பாளர் அனிருத் கதாநாயகனாக நடிப்பது என்பது அவரது விருப்பம். அவர் பன்முகத் திறமைகளோடு உள்ள நபர். வித்தியாசமான படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் ஐஸ்வர்யாவிற்கு எனது வாழ்த்துக்கள். 'வித் லவ்' திரைப்படம் வெற்றி பெற்றிருக்கிறது.
ரஜினி - கமல் இணைந்து நடிப்பது எங்களுக்கு ஸ்பெஷல் மொமெண்ட். தமிழ் சினிமாவுக்கு மைல்கல்லான 2 பேரையும் நினைத்து மிகவும் பெருமை.உங்களைப் போல ஜெயிலர்-2 ட்ரெய்லர், டீசர் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.