சென்னை,
‘‘என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் எழுந்து நிற்பார். இதற்கான காரணத்தை ஒருமுறை ரஜினி சாரிடம் கேட்டபோது, இது கலைக்கும் இயக்குநருக்கும் நான் கொடுக்கும் மரியாதை என்றார்” என ரஜினி குறித்து அஸ்வத் மாரிமுத்து பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும், இந்த படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த படத்திற்கான 2-ம் கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி சிலிர்த்துப் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "ரஜினி சார் தற்போது ‘ஜென் சி’ ரசிகர்களையும் கவரும் வகையில் மிகவும் உற்சாகமான தோற்றத்திலும், மனநிலையிலும் இருக்கிறார். மேலும், 'தர்மன் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் ஜாலியான படமாக உருவாகி வருகிறது.
ரஜினி சாரைப் போல் இனிமையான ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை. நெல்சன் சொன்னது போலவே, அவர் ஒரு அற்புதமான மனிதர். என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் எழுந்து நிற்பார். இதற்கான காரணத்தை ஒருமுறை ரஜினி சாரிடம் கேட்டபோது, ‘இது கலைக்கும் இயக்குநருக்கும் நான் கொடுக்கும் மரியாதை' என்றார்” என ரஜினி பற்றி அஸ்வத் மாரிமுத்து பேசினார்.