40 ஆண்டுகளில் முதல் முறையாக, ரஜினி ரசிகர்களுடன் ஐமேக்ஸ் திரையரங்கில் ‘ஜெயிலர் 2’ படத்தை பார்த்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றியை படக்குழுவினரும், ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வெளியான ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் சந்தானம் இடம்பெற்றுள்ளதால் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதா? இனிவரும் நாட்களில் அந்த காட்சிகள் வெளியிடப்படுமா? என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரஜினிகாந்த் காரிலிருந்து இறங்கி, படத்தைக் காண ஐமேக்ஸ் திரையரங்கிற்கு செல்கிறார். அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்தார். 40 ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்த் பொது வெளியில் திரைப்படத்தை பார்ப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.