திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் 51 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த்துடன் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 51 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 171 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ஐந்து தசாப்த சினிமா வாழ்க்கையில் பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் ரஜினிகாந்த். 75 வயதிலும் உச்சத்தில் இருக்கும் நடிகராக வலம் வருகிறார். திரை உலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும், இந்த படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். ‘தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சினிமாவில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோவை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.