சென்னை,
பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் தேவா இன்று காலமானார். அவருக்கு வயது 76. இன்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில அரசு விருது உள்ளிட்ட விருதுகளை தேவா பெற்றுள்ளார்.
அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை நுங்கம்பக்கம் இல்லத்தில் தேவாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரைப் பிரபலங்கள் பலர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தேவாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். ரஜினிகாந்தின் புகழ்பெற்ற ‘சூப்பர் ஸ்டார்’ டைட்டில் கார்டு இசையை உருவாக்கியவர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது.