சினிமா செய்திகள்

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டிக்கு சென்ற ரஜினிகாந்த்... ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

ஓட்டலில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்தை ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க முயன்றனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஓய்வு எடுப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் திடீரென ஊட்டிக்கு சென்றார். கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து வாடகை காரில் தனியாக ஊட்டிக்கு சென்ற ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

ஓட்டல் முன் குவிந்த ரசிகர்கள்

முன்னதாக ரஜினிகாந்த் வருகை குறித்து போலீசாருக்கு தெரியவில்லை. ரசிகர் மன்றம் மூலம் சிலருக்கு தகவல் தெரிய வந்ததால், நேற்று முன்தினம் இரவு ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ரஜினிகாந்த ஊட்டியில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பதை அறிந்து, நேற்று காலை ரசிகர்கள் ஓட்டல் முன் கூடினர். அப்போது ரஜினிகாந்த் திடீரென கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் ஓட்டலில் இருந்து வெளியே வந்தார்.

கையசைத்து வாழ்த்து

அங்கு வெளியில் காத்திருந்த ரசிகர்கள், அவரது காரை மறித்து நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க முண்டியடித்தனர். காரில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், கார் கண்ணாடியை மட்டும் இறக்கி ரசிகர்களை நோக்கி கையை அசைத்தவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவரது காரை ரசிகர்கள் சிலர் பின்தொடர்ந்து ஓடியபோதும், கார் நிற்காமல் மைசூருக்கு புறப்பட்டு சென்றது. மன்னன், எஜமான் உள்ளிட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்குப் பிறகு, பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் ஊட்டிக்கு செல்லாத நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் ஊட்டிக்கு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.