சென்னை,
ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 11 அல்லது 12-ம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அவரது பழைய திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டாலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 1992-ம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாமலை'. இதில் குஷ்பு, சரத்பாபு, மனோரமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
நட்பு, தொழில் போட்டி, பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ரஜினிகாந்தின் நடிப்பும், படத்தில் இடம்பெற்ற வசனங்களும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'அண்ணாமலை' திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 4கே தரத்தில் காட்சிகள் மேம்படுத்தப்பட்டு, டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஒலித்தொழில்நுட்பத்துடன் இப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.
ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 11 அல்லது 12-ம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளிலும் இப்படத்தின் மறுவெளியீட்டுக்கான விளம்பரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே கடந்த 2025-ம் ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி 'அண்ணாமலை' திரைப்படம் 4கே பதிப்பில் மீண்டும் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பழைய நினைவுகளை மீண்டும் திரையரங்குகளில் ரசிக்கக் காத்திருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த மறுவெளியீடு சிறப்பு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.