கீர்த்தி சுரேஷ் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இது ‘தெறி’ படத்தின் ரீமேக்காகும். அட்லி தயாரித்த இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. நடிகை கீர்த்தி தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘ரவுடி ஜனார்தனா’ படத்தில் நடித்து வருகிறார்,
இதையடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு இந்தி படத்துக்கு, ‘ரஃப்தார்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அனுராக் தாக்கூர், ரோஹன் வர்மா, தான்யா மணிக்தலா, ரஜத் கபூர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அமேசான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்தை ஆதித்யா நிம்பால்கர் இயக்கியுள்ளார். ராஜ்குமார் ராவின் மனைவியும் நடிகையுமான பத்ரலேகா, தனது காம்பா பிலிம் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
“வேகமாக வளரும் ஒரு ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனத்தையும், லட்சிய வெறி கொண்ட ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உணர்ச்சிகரமான உறவையும் மையப்படுத்திய கதை இது. பணம், அதிகாரம், பேராசை ஆகியவை பெருகும்போது, வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களது தாகம் காதலோடு மோதத் தொடங்குகிறது. பிறகு என்ன நடக்கிறது என்று படம் செல்லும். இந்தியாவின் வணிகக் கல்வி முறையை நையாண்டியாகவும் அறிவை விதைக்க வேண்டிய கல்வி எப்படி வணிக மயமானது என்பதையும் இப்படம் பேசும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜூலை 24-ல் வெளியாக இருந்த ‘ரஃப்தார்’ படம் அக்டோபர் 16-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.