சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். நடிகர் ராம் சரண் கடைசியாக இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ‘பெத்தி' திரைப்படத்தில் நடித்திருந்தார். படமும் கலவையான விமர்சனங்களைச் சந்தித்ததால் எதிர்பார்த்தை வெற்றியைப் பதிவு செய்யவில்லை. ராம் சரண் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்த நிலையில், ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய படமான ‘RC17’ திரைப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் கிளாப் அடித்து படத்தைத் தொடங்கி வைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பு 2027-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கவுள்ளது.
ராம் சரணின் புதிய திரைப்படத்தை சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. ‘ரங்கஸ்தலம்’ திரைப்படத்திற்குப் பின் ராம் சரணும் இயக்குநர் சுகுமாரும் 8 ஆண்டுகளுக்குப் பின் இணைவதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுகுமார் புஷ்பா, புஷ்பா 2 ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்பதால் இப்படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சாரா அர்ஜுனை, தற்போது சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 17வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.