தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உலகளவில் கடந்த 4ம் தேதி வெளியான படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள தியேட்டர்களில் வரவேற்பை பெற்று வருகிறது.
“பெண்கள் வெறும் கவர்ச்சிப் பொருளா?” - ‘பெத்தி’ பட இயக்குனர் கொடுத்த விளக்கம்
‘பெத்தி’ படத்தில் ஜான்வி கபூரின் கதாபாத்திரம், மிக மோசமான முறையில் அளவுக்கு மீறிய ஆபாசத்துடனும், வெறும் கவர்ச்சி பொருளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கதாநாயகிக்கு கதையில் எந்தவித முக்கியத்துவமும் தராமல், அவரை வெறும் கவர்ச்சிக்குரிய ஒரு பொருளாக மட்டுமே காட்டியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் ‘பெத்தி’பட இயக்குனர் புச்சி பாபு சனா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ ‘பெத்தி’ திரைப்படத்தின் சில காட்சிகள் குறித்த கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்து, அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். திரையிலும் சரி, நிஜத்திலும் சரி, பெண்கள் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. எந்தவொரு பெண் கதாபாத்திரத்தையும் ஒரு பொருளாகக் கருதுவதோ அல்லது அவமதிப்பதோ எங்கள் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. சம்பந்தப்பட்ட பகுதிகளில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்படவும், போற்றப்படவும், கண்ணியத்துடன் சித்தரிக்கப்படவும் தகுதியானவர். வலிமையான கதாபாத்திரங்களைக் கொண்டாடும் மற்றும் அந்த விழுமியங்களை நிலைநிறுத்தும் கதைகளைச் சொல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ” என்றார்,
3 நாட்களில் ரூ.236 கோடி வசூல்
இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ.236 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வரும் நாட்களிலும் ‘பெத்தி’ திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன. ராம் சரண் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பெத்தி’ திரைப்படம், தற்போது வசூல் வேட்டையை வெற்றிகரமாக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.