தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 4ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எதிர்பார்த்தி ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த படத்தின் டிரெய்லர், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில், பெத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜெகபதி பாபு சமீபத்தில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
‘பெத்தி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சிவராஜ் குமார், “ராம் சரணை துவக்கத்திலிருந்து பார்த்து வருகிறேன். அப்போது இருந்து மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். அதனால்தான் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார். எல்லாம் அவரது தாய் தந்தை ஆசிர்வாதம். அவரது தந்தை வழிகாட்டுவது ஒரு விஷயம். என்னுடைய தம்பி புனீத்போலதான் ராம் சரணும் எனக்கு. அவருடன் நடிக்க சொல்லிக் கேட்டது பெரிய சந்தோஷமாக இருந்தது.
இந்த ‘பெத்தி’ படத்துக்காக ராம் சரணுக்கு தேசிய விருது கிடைக்கும். இங்கிருக்கும் அனைவருக்கும் ராமை தெரியும். சிரஞ்சீவியின் மீதும் பலருக்கும் அன்பு உண்டு. ஒரு முறை சிரஞ்சீவி பிறந்தநாளைக்கு இரத்த தான முகாம் நடந்தபோது நான் சென்று ரத்தம் கொடுத்திருக்கிறேன். எனக்கு சிரஞ்சீவியை மிகவும் பிடிக்கும், மொத்த குடும்பத்தையும் பிடிக்கும். ‘பெத்தி’ பட வாய்ப்பு வந்தபோது உடனடியாக ராம்சரனுக்கு போன் செய்து ‘நான் நடிக்கிறேன், அவ்வளவுதான்’ என்று கூறினேன். இது வெறும் ஸ்போர்ட்ஸ் படம் இல்லை. இதில் ஒரு எமோஷனும் இருக்கிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு எமோஷன் இருக்கிறது. மனுஷன் - விளையாட்டு இரண்டுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. யாருக்காக விளையாடுகிறோம், எதற்காக விளையாடுகிறோம் என்பதுதான் இந்தப் படம். அந்த உணர்வு அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.
இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.