ராமதாஸின் வாழ்க்கை வரலாற்று படமான ‘அய்யா’ கைவிடப்பட்டதாகவும் அதற்கான காரணத்தையும் இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
சேரன் இயக்கத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு ‘அய்யா’ என்ற தலைப்பில் உருவாகுவதாகக் கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியானது. இதில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் ஆரி நடிக்கவிருப்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் என்ற பேனரில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தமிழ் குமரன் தயாரிப்பதாகவும் சுந்தர மூர்த்தி இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு பெரிதாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் இயக்குநர் சேரன் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ஒன்’ பட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மருத்துவர் ராமதாஸ் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை முதலில் திரைப்படமாக எடுக்க முயன்றவர் தம்பி சங்ககிரி ராஜ்குமார்தான். சில காரணங்களால் அவரால் இயக்கமுடியவில்லை. ஆனால் அவர் தயார் செய்து வைத்திருந்த கதையை வைத்து என்னை இயக்க சொல்லி தயாரிப்பு தரப்பில் அழைப்பு வந்தது. அது எனக்கு நெருடலாக இருந்தது. அதனால் ராமதாஸிடமே சென்று இந்தப்படத்தை சங்ககிரி ராஜ்குமாரே எடுக்கட்டும் அவருக்கு நான் துணையாக இருக்கிறேன் என்றேன். ஏனென்றால் அவருக்கு ஒரு அடையாளம் வேண்டும். ஆனால் அதற்கு அவரும் தயாரிப்பு தரப்பும் ஒப்புக்கொள்ளவில்லை. படம் சிறப்பாக வர வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். உடனே நான் சங்ககிரி ராஜ்குமாரிடம் சென்று வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டதாகவும் பெரியவர் கேட்கும் போது அதை என்னால் மறுக்க முடியவில்லை என்றும் சொன்னேன். இதனால் சங்ககிரிக்கு என்மேல் வருத்தம். நான் என்ன செய்ய முடியும்.
ஆனால் இப்போது அப்படம் எனக்கும் இல்லாமல் சங்ககிரிக்கும் இல்லாமல் கைவிடப்பட்டுவிட்டது. அவர் ஒரு ஒன்றரை வருஷம் அலைந்தார், நான் ஒரு ஒன்றரை வருஷம் அலைந்தேன். 80-களில் நடக்கும் கதை என்பதால் அதுக்கேற்ற லொகேஷன்களை தேடி நானும் எனது 15 பேர் கொண்ட குழுவும் தமிழ்நாடு முழுக்க அலைந்தோம். நிறைய ஆய்வுகளை மேற்கொண்டோம். ஆனால் அது நடக்காமல் போனால் எவ்வளவு வலி இருக்கும். அவர்கள் சொல்லலாம் நீங்கள் வேலை பார்த்த வரைக்கும் உங்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டோம் என்று. அது எங்களுக்கு முக்கியமில்லை. நாங்கள் நினைத்தபடி படம் உருவாகிவிட்டால் சம்பளம் கிடைக்காவிட்டாலும் அதற்கு நான் கவலைப்படப்போவதில்லை. அப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான இயக்குநர் நான். படம் எதனால் நடக்கவில்லை எனப் பார்த்தால் அப்பா - மகன் சண்டையால் நின்று போய்விட்டது. ஆனால் இப்போது அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள், படம் எடுக்க ஆளில்லை” என்றார்.