ராமாயணா-1  
சினிமா செய்திகள்

முன்பதிவிலேயே ரூ.96.56 கோடி வசூல்: இமாலய சாதனை படைத்த ‘ராமாயணா-1’!

படத்தின் முதல் நாளான நாளை (வியாழக்கிழமை) மட்டும் ரூ.39.35 கோடி மதிப்பிலான 10.11 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

சென்னை,

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான ராமாயணா-1 திரைப்படம் முன்பதிவிலேயே ரூ.96.56 கோடி வசூல் செய்து இமாலய சாதனை படைத்துள்ளது.

இமாலய வரலாற்று சாதனை

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் கன்னட நடிகர் யாஷ் ஆகியோர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணம் பாகம் 1’. இந்த திரைப்படம், நாளை (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், முன்பதிவிலேயே ரூ.96.56 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் புதிய இமாலய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

திரைப்பட வர்த்தக பகுப்பாய்வு தளமான 'சாக்னில்க்' வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, இன்று (புதன்கிழமை) மாலை வரையிலான நிலவரப்படி, நாடு முழுவதும் இப்படத்திற்காக சுமார் 25.65 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தியேட்டர் இருக்கைகள் முடக்கப்பட்டது உட்பட மொத்தம் ரூ.96.56 கோடி வசூலாகியுள்ளது. இருக்கை முடக்கங்களைத் தவிர்த்து, உண்மையான முன்பதிவுத் தொகை மட்டுமே ரூ.77.31 கோடியைத் தாண்டியுள்ளது.

மொழி வாரியான ஆதிக்கம்

இந்திய அளவில் இப்படத்தின் வசூலில் ஹிந்தி சந்தை 82% பங்களிப்புடன் முன்னிலையில் உள்ளது. ஹிந்தி பதிப்பில் மட்டும் ரூ.78.88 கோடி வசூலாகியுள்ளது. தென்னிந்திய மொழிகளைப் பொறுத்தவரை தெலுங்கில் ரூ.8.09 கோடியும், கன்னடத்தில் ரூ.7.27 கோடியும், தமிழில் ரூ.1.84 கோடியும், மலையாளத்தில் ரூ.49.23 லட்சமும் முன்பதிவு மூலம் கிடைத்துள்ளது.

5 நாட்களுக்கான முன்பதிவு நிலவரம்

படத்தின் முதல் நாளான நாளை (வியாழக்கிழமை) மட்டும் ரூ.39.35 கோடி மதிப்பிலான 10.11 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. அதனைத் தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும், திங்கட்கிழமைக்கான முன்பதிவிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக இந்த இமாலய தொகை எட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய பாக்ஸ் ஆபீஸைப் பொறுத்தவரை, வெளிநாட்டு முன்பதிவுகளையும் சேர்த்து 'ராமாயணா - பாகம் 1' திரைப்படம் ஏற்கனவே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்த தீபாவளிப் பண்டிகை விடுமுறையில் இந்திய திரை வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான ஓப்பனிங் பெறும் திரைப்படமாக 'ராமாயணா-பாகம் 1' இருக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

SCROLL FOR NEXT