சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராமாயணா... ‘என் கனவு நனவாகியுள்ளது’ - யாஷ் நெகிழ்ச்சி

ஏ.ஆர்.ரகுமானுக்கும், கன்னட மண்ணுக்கும் இருக்கும் தொடர்பு ஆழமானது என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கன்னட சினிமாவில் இருந்து வந்து, 'கே.ஜி.எப்.' திரைப்படத்தின் மூலம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், நடிகர் யாஷ். இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்டு மாதம் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான 'டாக்சிக்' திரைப்படம், பெரிய தோல்வியை சந்தித்தது. ரூ.1,000 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ஒட்டுமொத்தமாக ரூ.350 கோடி வசூலைக் கூட எட்டவில்லை.

இந்த நிலையில் அடுத்ததாக பிரமாண்ட பொருட்செலவில் தயாராகி இருக்கும் 'ராமாயணா' திரைப்படத்தில், ராவணன் வேடத்தில் யாஷ் நடித்திருக்கிறார். 'டாக்சிக்' படத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை, 'ராமாயணா' படத்தின் மூலம் மீட்டெ டுக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் யாஷ் உள்ளார்.

'ராமாயணா' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் என ஆஸ்கார் விருது வென்ற 2 இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தீபாவளி பண்டிகையையொட்டி ராமாயணா படத்திற்கு திரைக்கு வர உள்ளது.

இந்த படம் தொடர்பாக பெங்களூருவில் நடந்த விழாவில் நடிகர் யாஷ் பேசும்போது, "இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும், கன்னட மண்ணுக்கும் இருக்கும் தொடர்பு ஆழமானது. பகுதிநேர வேலைக்காக அவர் பெங்களூரு வந்தபோது, பின்னணி இசையமைத்து சம்பாதித்திருக்கிறார். கன்னடர்கள் தந்த பணத்தை வைத்துதான், தனது முதல் ஸ்டூடியோவை கட்டியதாக அவரே கூறியிருக்கிறார்.

நான் சிறுவனாக இருந்தபோது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வந்த பாடல்களுக்கு நடனம் ஆடி இருக்கிறேன். இப்போது அவரது இசையில், இந்தப் படத்தை தயாரித்து, அதில் நடிக்கவும் செய்திருக்கிறேன். இந்தப் படம் தொடர்பான ஆலோசனையில் ஏ.ஆர்.ரகுமானுடன் இருந்தது சிறப்பான தருணம். இதனால் என் கனவு நனவாகியுள்ளது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT