சினிமா செய்திகள்

“ராமாயணா” ஹாலிவுட் படங்களை விட எந்த வகையிலும் குறைவில்லாதது - நடிகர் சன்னி தியோல்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்துள்ள ‘ராமாயணா ’ படம் 4 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராமாயணா ’. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவான ‘ராமாயணா’ படம் உலகம் முழுவதும் கடந்த 5ம் தேதி ரிலீஸ் ஆனது.

‘ராமாயணா’ படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக் ஆனதை அடுத்து, திரையரங்குகளில் போன் மற்றும் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்வதோ அல்லது ஆன்லைனில் பகிர்வதோ சட்டப்படி குற்றம் என்றும், அப்படிச் செய்வோர் மீது கடுமையான காப்புரிமைச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் எச்சரித்துள்ளனர்.

ரூ. 500 கோடி வசூல்

‘ராமாயணா’ படம் ரிலீஸ் ஆனது முதல் இதுவரை 4 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. குறிப்பாக, தீபாவளி பண்டிகை தினமான நேற்று மட்டும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்தியாவில் ரூ. 56 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ வெளியிட்ட நடிகர் சன்னி தியோல்

இத்திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் அனுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ ‘ராமாயணா’ திரைப்படம் ஹாலிவுட் படங்களை விட எந்த வகையிலும் குறைவில்லாதது என்றும், சொல்லப்போனால் அவற்றை விட மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் விசுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் பார்வையாளர்களை அந்த உலகத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் மிகவும் யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு இந்தியரும் திரையரங்கிற்குச் சென்று இப்படத்தைக் காண வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இப்படத்தில் நடித்துள்ள ஒட்டுமொத்த நடிகர் மற்றும் படக்குழுவினரின் உழைப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

‘ராமாயணா’ இரண்டாம் பாகத்தில் இவரது அனுமன் கதாபாத்திரம் மிகவும் நீளமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT