சினிமா செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸில் பிரம்மாண்டமாகத் திரையிடப்படும் ‘ராமாயணா’ பிரீமியர் காட்சி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

ரன்பீர் கபூர், யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட உள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணா’

வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி

இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அக்டோபர் 27-ல் சிறப்புத் திரையிடல்

இந்த நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி மியூசியம் ஆப் மோஷன் பிக்சர்ஸில் அக்டோபர் 27-ஆம் தேதி திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள டேவிட் கெபன் திரையரங்கில் 3டி தொழில்நுட்பத்தில் இந்தத் திரையிடல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள், திரைப்பட இயக்குநர்கள், சர்வதேச ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த 945 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT