ஜிடிஏ வீடியோ கேம் பாணியில், ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய வீடியோ கேம் உருவாகி வருவதாக ‘ராமாயணா’ படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.1,815 கோடியைக் கடந்துள்ளதாகவும், இதன் மூலம் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற ஜிடிஏ (GTA) வீடியோ கேம் பாணியில், ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய வீடியோ கேம் உருவாகி வருவதாக ராமாயணம் படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த கேம் தற்போது தயாரிப்பு நிலையில் இருப்பதாகவும், விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் விளையாட்டின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குழந்தையும் ஜிடிஏ விளையாடுவதைப் போல ராமாயணத்தையும் விளையாட வேண்டும். அதே நேரத்தில் விளையாடிக்கொண்டே நமது கலாச்சாரத்தையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த கேமில் ராமாயணத்தின் முக்கியக் காட்சிகளை விளையாட்டு அனுபவமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஜடாயுவுடன் வானில் பறப்பது, ராவணனுடன் போரிடுவது போன்ற காட்சிகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.