நடிகர் ராணா டகுபதி, இந்திய மக்கள் தொகையில் 10% மட்டுமே உள்ள தெலுங்கு மக்கள், இந்தியத் திரைப்படத் துறையின் வருவாயில் 70% பங்களிப்பதாகக் கூறியுள்ளார்.
‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டகுபதி . தமிழில் அஜித்குமாருடன் ஆரம்பம், தனுசின் எனை நோக்கி பாயும் தோட்டா, விஷ்ணு விஷாலுடன் காடன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினத்தில் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் 31வது உச்சி மாநாடு கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன் இரண்டாம் நாளில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷுடன் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஒரு உரையாடல் நிகழ்ச்சி மேற்கொண்டார். இந்நிகழ்ச்சி திரைப்படத் துறை, படைப்பாற்றல் பொருளாதாரம், சுற்றுலா, முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து அமைந்திருந்தது. அப்போது திரைப்படத் துறை மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆந்திர அரசோடு இணைந்து பணியாற்றுவதாக நடிகர் ராணா டகுபதி தெரிவித்தார்.
இதையடுத்து தெலுங்கில் தான் இந்திய சினிமா அளவில் அதிக லாபத்தை ஈட்டுவதாக அவர் தெரிவித்தார். அவர் பேசியதாவது, “இந்தியாவின் மக்கள் தொகையில் தெலுங்கு பேசுபவர்கள் சுமார் 10 சதவீதம் மட்டுமே இருக்கிறோம். ஆனால் இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 70 சதவீத வருவாயை கொடுக்கிறோம். தெலுங்கு ரசிகர்கள் மட்டும் தான் மற்ற மொழியில் டப்பிங் செய்யும் படங்களை தங்களது சொந்த படங்களைப் போல் பார்க்கின்றனர்” என்றார்.
இவரது பேச்சு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தி சினிமா ரசிகர்கள் இவர் கூறியது தவறு எனக் கூறி வருகிறார்கள். அதற்கு சாட்சியாக இந்தாண்டு வெளியான இந்தி படங்களில் துரந்தர் 2 அதிகபட்சமாக 1,600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் தெலுங்கை பொறுத்தவரை பெத்தி படம் 300 கோடிக்கு மேல் மட்டுமே வசூலித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.