சினிமா செய்திகள்

ரன்பீர் கபூரின் “ராமாயணா” படத்தின் டிரெய்லர் வெளியீடு ஒத்திவைப்பு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.

‘ராமாயணா’ திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் ஸ்டூடியோஸ் வாங்கியிருப்பதால் திரைப்படத்தின் டிரெய்லரை உலக அளவில் வேறு ஒருநாளில் வெளியிட இருப்பதாக படக்குழு கூறியுள்ளது.

வால்மீகி எழுதிய ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி

இந்தப் படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்ட படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாயின.

டிரெய்லர் வெளியீடு ஒத்திவைப்பு

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லரை உலக அளவில் வேறு ஒருநாளில் வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது ‘ராமாயணா’ படத்துக்கு இன்று சிறப்பான நாள். உலகம் முழுவதும் இந்தப் படத்தை எடுத்துச்செல்லும் எனது கனவு சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் உடன் இணைந்து உண்மையாகியுள்ளது. மற்றுமொரு நாளில் உலக அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக டிரெய்லர் வெளியாகும். 100 ஆண்டுக்கும் மேலான இந்திய சினிமாவில் இது மிகவும் பெருமைமிகும் தருணம். பெரிய ஹாலிவுட் படங்கள் போல நமது ராமாயணா வெளியாகவிருக்கிறது. புத்துணர்வான பெருமை மற்றும் ஆர்வத்துடன் நமது கலாச்சாரம், கதைகளின் உயர்ந்த தரத்தை இந்த உலகம் பார்வையிடுவதற்கான கதவை திறந்துள்ளோம் என்பது சிறப்பானது. ராமாயணத்தின் அனைத்து ரசிகர்களுக்கும் விசுவாசிகளுக்கும் எனது நன்றிகள். நம் நாட்டின் இளைஞர்களே நமது எதிர்காலம். நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க நம்மால் முடிந்த சிறந்ததை நாம் அனைவரும் செய்வோம்” என கூறியுள்ளார்.